இந்துக்களின் பண்டிகையின்போது மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல - அண்ணாமலை

இந்துக்களின் பண்டிகைகளின்போது மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல என அண்ணாமலை கூறியுள்ளார்

Update: 2022-09-01 03:19 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

விசேஷ நாட்களில் வாழ்த்து சொல்வது என்பது தமிழர் மரபின் ஓர் அங்கம். குறிப்பிட்ட ஒரு சமூகம் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்து கூறாமல் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு சென்ற ஆண்டும் வாழ்த்து சொல்லவில்லை.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தி.மு.க. தலைவராக வாழ்த்து சொல்வதும், சொல்லாமல் இருப்பதும் கொள்கை ரீதியில் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இப்போதோ நீங்கள் அனைத்து தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரஜை. கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள், இந்துக்களின் பண்டிகைகளின்போது வாழ்த்துகள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

தி.மு.க.வில் 90 சதவீத உறுப்பினர்கள் இந்துக்களே என்று சொல்லும் நீங்கள், உங்கள் வாழ்த்து செய்தி அவர்களையும் சென்றடையும் என்பதற்காகவாவது இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தலாமே. தமிழகத்தில் பெருவாரியாக கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்குவது போன்ற செயலாகும் என்பதை மு.க.ஸ்டாலின் உணருவார் என்பது எங்கள் நம்பிக்கை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்