கோவில் வளாகத்தில் கடைகள் செயல்படுவதை ஏற்க இயலாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
கோவில் வளாகத்தில் கடைகள் செயல்படுவதை ஏற்க இயலாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்த வசந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளேன். தூத்துக்குடி மாப்பிள்ளை ஊருணி பகுதியில் பழமையான சங்கரராமேசுவரர் கோவில், வைகுண்டபதி கோவில் ஆகியவை உள்ளன. இங்கு பழங்காலத்தில் இருந்து பூ விற்கவோ, பிரசாதம் விற்கவோ எந்தக் கடையும் இல்லை. ஆனால் தற்போது பூக்கடைகள் மற்றும் பிரசாத விற்பனைக் கடைகள் நடத்துவதற்கு கோவிலின் செயல் அலுவலர் டெண்டர் நடத்தி கோவில் வளாகத்திற்குள் கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இது முற்றிலும் கோவிலின் பழமையான நடவடிக்கைகளுக்கு எதிரானது.
சங்கரராமேசுவரர் கோவிலை பொறுத்தவரை நுழைவாயிலின் மொத்த அகலம் 20 அடிதான். இங்கு பூக்கடைகள், பிரசாத கடைகளுக்கு அனுமதித்துள்ளதால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். இந்த கடைகளால் பல்வேறு பழமை வாய்ந்த சிற்பங்கள் மறைக்கப்படுகிறது. இதற்காக கோவில் நுழைவாயில் பகுதியில் பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே தூத்துக்குடி மாப்பிள்ளைஊருணி சங்கரராமேசுவரர் கோவில், வைகுண்டபதி கோவிலுக்குள் செயல்படும் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில் வளாகத்தில் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்க இயலாது என கருத்து தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக பதில் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.