சேமிப்பு தொடங்கி 9 மாதமாகியும் வங்கி கணக்கு புத்தகம் வழங்காத வங்கிக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்

சேமிப்பு தொடங்கி 9 மாதமாகியும் வங்கி கணக்கு புத்தகம் வழங்காத வங்கிக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-11-01 07:50 GMT

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் குமரேசன். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள கனரா வங்கியில் 15-10-2016 அன்று சேமிப்பு தொடங்குவதற்கு விண்ணப்ப படிவம் கொடுத்து ரூ.1000 செலுத்தினார். மேலும் அந்த படிவத்தில் ஏ.டி.எம். கார்டு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது வீட்டு முகவரிக்கு ஏ.டி.எம். கார்டு மட்டும் வந்ததே தவிர வங்கி கணக்கு புத்தகம் வரவில்லை. இதுகுறித்து குமரேசன் பலமுறை வங்கியில் சென்று கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. 9 மாதமாகியும் வங்கி கணக்கு வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளான குமரேசன், செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வங்கி கணக்கு புத்தகம் குறித்து கேட்டபோதும் உரிய பதில் வங்கியிடம் இருந்து கிடைக்கவில்லை. பிறகு டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்திடம் வங்கி புத்தகம் குறித்து கேட்டார். தொடர்ந்து ஆணையத்தின் உத்தரவுபடி குமரேசனுக்கு விவரங்கள் வழங்கப்பட்டன.

இதனையெல்லாம் கோர்ட்டில் ஒப்படைத்த பிறகு 24-1-2020 அன்று வழக்கை ஏற்று விசாரணை நடந்தது. 10-2-2020 அன்று தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு ஆண்டுக்கு ஏ.டி.எம். பராமரிப்பு கட்டணம் ரூ.260 மற்றும் சிஸ்டம் சர்வீஸ் கட்டணம் ரூ.386 என்று பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர் ஜவஹர் கூட்டாக தீர்ப்பளித்தனர். அதில் ஏ.டி.எம் பராமரிப்பு கட்டணம் ரூ.260, சர்வீஸ் கட்டணம் ரூ.386-ஐ திருப்பி வழங்க வேண்டும். குமரேசனுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோர்ட்டு செலவுக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்