நாவலூரில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை - முன்னாள் காதலன் வெறிச்செயல்
காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் தனியார் தண்ணீர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியின் எதிரே காலியிடங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தண்ணீர் கம்பெனியின் எதிரே உள்ள காலியிடத்தில், சாலையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது இளம்பெண்ணின் கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் தண்ணீர் கம்பெனியில் வேலை செய்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாழம்பூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் செல்போன் ஒன்று சிக்கியது. அந்த போனில் பதிவாகி இருந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த பெண் பெருங்குடியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்த மதுரையைச் சேர்ந்த நந்தினி (வயது 25) என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த நிலையில், நந்தினியின் முன்னாள் காதலன் வெற்றிமாறன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றுவிட்டு 'பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் எனக்கூறி அழைத்து சென்று கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளார்.
காதலித்து வந்த வெற்றிமாறன் திருநம்பி என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வேறொரு இளைஞரை நந்தினி காதலிப்பதை அறிந்த வெற்றி திட்டம் போட்டு அவரை கொலை செய்துள்ளார். கைதான வெற்றியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கை, கால்களை சங்கிலியால் கட்டி பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.