ஐ.டி. ஊழியர் தற்கொலை
கோவையில் வேலைப்பளு காரணமாக ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை செல்வபுரம் அருகே உள்ள செட்டி வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 25). இவருடைய சகோதரி லட்சுமிபிரியா (29). இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பாலாஜிக்கு அதிக வேலைப்பளு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். மேலும் தனது வேலைப்பளு குறித்து தனது சகோதரியிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். இதையடுத்து பாலாஜிக்கு, லட்சுமிபிரியாவும், அவரது தாயும் ஆறுதல் கூறினர்.
சம்பவத்தன்று இரவு பாலாஜி தனது தாய், சகோதரியுடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் லட்சுமி பிரியா எழுந்து பார்த்தபோது, பாலாஜி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை தேடி பக்கத்து அறைக்கு சென்றார். அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது பாலாஜி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.