கோவில் குடமுழுக்கு விழாவுக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு
கோவில் குடமுழுக்கு விழாவுக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட தோப்புத்துறை வடகட்டளை வனத்துர்க்கை அம்மன் கோவிலில் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு வரும்படி தோப்புத்துறை கிராமத்தில் உள்ள ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், ஜமாத் மன்றத்தினருக்கு தோப்புத்துறை இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் பத்திரிகை வைத்து மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பகுதியில் ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் இந்துக்கள் சார்பில் நோன்பு விருந்தளிப்பது என்பதும் பல ஆண்டு கால வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் ஒரே குடும்பத்தினர் போல பழகி வருவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.