மதுபான கொள்முதல் விவரங்களை வெளியிடுவதில் விலக்கு உள்ளதா? டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி
தனியார் நிறுவனங்களில் மதுபானங்களை கொள்முதல் செய்யும் விவரங்களை வெளியிட விலக்கு உள்ளதா? என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
டாஸ்மாக் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம், அதில் ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை உள்ளிட்ட இதர செலவினங்கள், எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்பது குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோவையைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தார்.
ஆனால் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், அதில் ஊழியர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பதை மூன்றாவது நபரின் தனிப்பட்ட வர்த்தகம் சார்ந்தது என்பதால், அந்த விவரங்களை வழங்க முடியாது என மறுத்துவிட்டது.
விலக்கு உள்ளது
இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை மனுதாரருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் உரிமைச் சட்டத்தின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது. இதுபோன்ற தகவல்களை அளிப்பதில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விலக்கு உள்ளது என்று வாதிட்டார்.
என்ன பாதிப்பு?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபானங்களை கொள்முதல் செய்கிறது. இந்த மதுபானங்களை கொள்முதல் செய்ய டெண்டர் எதுவும் கோரப்படுவதில்லை, நேரடியாக மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இந்த சூழலில் வர்த்தகம் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது? டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்ற தகவலை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளிப்பதில் இருந்து விலக்கு உள்ளதா என்பது குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.