இலவச கழிப்பறைக்கு கட்டணமா

கள்ளக்குறிச்சிபஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைக்கு கட்டணமா? பயணிகள் குமுறல்

Update: 2022-12-27 18:45 GMT

கள்ளக்குறிச்சி

மாவட்டத்தின் தலைநகராக உள்ள கள்ளக்குறிச்சி அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர், கல்வராயன் மலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விழுப்புரம், சென்னை, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஆத்தூர், சேலம், ஈரோடு, ராசிபுரம், நாமக்கல், திருவண்ணாமலை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பிற மாவட்ட, மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு தினமும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இலவச கழிப்பறை

பஸ் நிலையத்தில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக கட்டண கழிவறை கட்டப்பட்டு நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு கழிப்பறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கழிப்பறை ஒன்று கட்ட வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் இலவச பொதுக்கழிப்பறை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிப்பறை கட்டிடம் சுகாதார சீர்கேடு மிகுந்ததை அடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பூட்டியே கிடந்தது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிலர் அங்குள்ள திறந்தவெளிப்பகுதியை கழிப்பறையாக பயன்படுத்தி வந்ததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்தது.

குழப்பம்

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பூட்டி கிடந்த இலவச கழிப்பறையை நகராட்சி சார்பில் பழுது பார்த்து வர்ணம் பூசும் பணி முடிவடைந்ததை அடுத்து மீண்டும் இந்த கழிப்பறை திறக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த கழிவறையின் முன்பக்கம் மேஜை, நாற்காலி போட்டு சிலர் கட்டணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இலவச கழிப்பறை என்று செல்லும் பயணிகளிடம் அங்கு நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபர் பணம் கேட்கும்போது இது கட்டண கழிப்பறையா? அல்லது இலவச கழிப்பறையா என்று குழப்பம் அடைகின்றனர்.

வசதி படைத்தவர்கள், காசு கொடுத்து கழிப்பறையை பயன்படுத்தி வந்தாலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் அங்குள்ள திறந்தவெளியையே கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

பயணிகள் கோரிக்கை

எனவே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இலவச கழிப்பறையில் கட்டணம் வசூல் செய்வதற்கு தடைவிதித்து மீண்டும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறையாக தொடர்ந்து செயல்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொன்ராஜ் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த இலவச கழிப்பறையை பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென இலவச கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றி கட்டணம் வசூல் செய்வது அதிர்ச்சியாக உள்ளது. பஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கட்டண கழிப்பறை செயல்பட்டு வரும் நிலையில் இலவச கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக விசாரணை நடத்தி இலவச கழிப்பறையில் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்தி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கழிப்பறை, இலவச கழிப்பறையாகவே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்