கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா?

கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா? என்பது குறித்து பெற்றோர் ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-02 19:24 GMT

வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.

தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கங்கோ செல்கிறார்கள். இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

கலாசாரம், பண்பாடு

கரூரில் வசித்து வரும் கதிரேசன்:- நாங்கள் குடும்பத்துடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக கரூரில் வசித்து வருகிறோம். எங்களது சொந்த ஊர் தென் மாவட்டமான திருநெல்வேலி. குடும்பத்துடன் ஊருக்கு செல்வது என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். குழந்தைகளை ஊருக்க அழைத்து செல்கின்ற போது நமது கிராமத்தின் பாரம்பரிய கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்கிறார்கள். கிராமங்களில் கிடைக்கின்ற நொங்கு, பதநீர், பனங்கிழங்கு போன்றவை தாத்தா-பாட்டிகள் விரும்பி கொடுக்கின்ற போது குழந்தைகள் அவற்றை உண்டு மகிழ்கின்றனர். தற்போது முக்கியமான உறவினர்களின் திருமணம், கோவில் திருவிழா, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மட்டும் தான் ஊருக்கு சென்று வருகிறோம். மேலும் போக்குவரத்து செலவு நாளைக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு முறை ஊருக்கு சென்று விட்டு வந்தால் அந்த செலவுகளை ஈடு செய்வதற்கு குறைந்தது 2 மாதங்கள் ஆகிறது. எனவே அடிக்கடி ஊருக்கு செல்வது காலப்போக்கில் குறைந்து விடும்.

பயிற்சி மையங்கள்

வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகர்:- பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடுவதே, அவர்களது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காகத்தான். முன்பெல்லாம் இந்த விடுமுறை நாட்களில் உற்றார் உறவினர்களது வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சி பொங்க விளையாடி மகிழ்வர். பெரும்பாலானோர் பிழைப்பு தேடி பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூட்டுக்குடும்பங்களாக இல்லாமல் தனித்தனி குடும்பங்களாக நகரப் பகுதிகளை நோக்கிச் சென்று விடுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் பணிகளிலேயே கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே கோடை விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்கு செல்வது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அப்படியே சென்றாலும் ஓரிரு நாட்களில் திரும்பி வந்து விடுகின்றனர். இதனால் கோடை விடுமுறை நாட்களை செலவிட வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை பல்வேறு பயிற்சி மையங்களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். அவர்களுக்கு தனித்திறமைகள் வளர்ந்த போதும் வாழ்க்கைத்திறன்களில் போதிய முன்னேற்றம் இல்லை. பல குழந்தைகள் வீட்டில் தனியாகவே இருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. இதனால் செல்போனை அதிகம் பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். நாளடைவில் கற்றல் மீது நாட்டம் குறைந்து விடுகிறது. செல்போன் விளையாட்டுகளில் மூழ்கி விடுகின்றனர். பல குழந்தைகளுக்கு இதனால் மனநிலை பாதிப்பும் ஏற்படுகிறது. உறவினர்கள் அல்லாத பல்வேறு குடும்பங்கள் தான் ஓரிடத்தில் வசிக்கின்றனர். இந்த குடும்பங்களை உள்ளடக்கிய சமூக விளையாட்டுகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தினால் மாணவர்களிடம் வாழ்க்கை திறன்களும் மேம்படும், சமூக கட்டமைப்பும் வலுப்பெறும்.

உறவினர் வீடுகளுக்கு செல்ல மறுப்பு

வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்:- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்து விட்டாலே போதும் அவர்களுடைய பாட்டி, அத்தை, சித்தி ஆகிய உறவினர் ஊர்களுக்கு சென்று அங்கு கோடை விடுமுறையை சந்தோஷமாக கழிப்பார்கள். தற்போது உள்ள குழந்தைகள் உறவினர் வீடுகளுக்கு செல்ல மறுக்கிறார்கள். கோடை விடுமுறை விடுவதற்கு முன்பே மாணவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போக வேண்டும் என்று தங்களுக்குள் பேசி முடிசெய்து விடுகிறார்கள். பின்னர் பெற்றோர்களை தொல்லை செய்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு உருவாக்கி விடுகிறார்கள். இந்த பயணம் மூலம் குறைந்தது 2, 3, நாட்கள் கழிப்பதே ஒரு மாதம் கோடை விடுமுறையை கழிப்பதற்கு சமமாகும். இப்படி போன்ற பயணங்களுக்கு அரசு பணி, நல்ல வருவாய் உள்ளவர்களுக்கு இது பொருந்தும். நடுத்தர மக்கள் கோடை விடுமுறைக்காக அதிகம் செலுவு செய்ய தயங்குவதால் அவர்களது குழந்தைகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

வெயிலின் தாக்கம் அதிகம்

தோகைமலை அருகே உள்ள மாகாளிபட்டியை சேர்ந்த மழையப்பன்:- நான் தரகம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும் குடும்பத்துடன் வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தொடர் விடுமுறை எடுத்துக்கொண்டு வெளியூர் செல்ல முடியவில்லை. இதன்காரணமாக குழந்தைகளை சொந்த ஊரில் விட்டுவிட்டு நான் மட்டும் இங்கு பணிபுரிந்து வருகிறேன். குழந்தைகளை பொறுத்த வரையில் ஆண்டு முழுவதும் படித்துவிட்டு கோடை விடுமுறையிலாவது புத்தகத்தை மறந்து தாத்தா- பாட்டியுடன், சொந்தம் பந்தங்களுடன் பொழுதை கழிக்கத்தான் ஆசைப்படுகிறார்கள்.

செல்போனில் விளையாட்டு

புகழூர் அருகே வள்ளுவர் நகரை சேர்ந்த இல்லத்தரசி தெய்வசிகாமணி:- பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்று மாத கணக்கில் அங்கு தங்கி இருப்பது வழக்கம். தாத்தா, பாட்டிகளும் பேரன், பேத்திகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்வர். அதேபோல் வசதி படைத்தவர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சியான பிரதேசங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவார்கள். நடுத்தர மக்கள் உறவினர் வீடுகளுக்கும், தாத்தா, மாமா வீடுகளுக்கும் சென்று தங்கி இருப்பது வழக்கம். ஆனால் அந்த பழக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. வெளியூர்களில் தங்கி இருக்கும் குடும்பத்தினர் விடுமுறை நாட்களில் அங்கேயே இருந்து விடுகின்றனர். கிராமப்புறங்களுக்கு செல்வதில்லை. அவர்கள் குழந்தைகளுக்கு கிராம புறத்தின் சுற்றுச்சூழல்களை சொல்லித் தருவதில்லை. குழந்தைகள் செல்போனை வைத்துக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் வெளியே போவதை அவர்கள் தவிர்த்து விடுகின்றனர். கிராமப்புறங்களுக்கு சென்று தாத்தா, பாட்டியுடன் தங்கி இருக்கும் போது அங்குள்ள பசுமையான வயல்கள், தோட்டங்கள், தோட்டத்தில் உள்ள மரம், செடிகளை சுற்றிப் பார்ப்பது. தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிப்பது. வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை மேய்ப்பது. அதற்கு தீவனம் வைப்பது இவையெல்லாம் ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோடை வெப்பத்தை வெல்வோம்

இயற்கை மருத்துவர்கள் கூறும் போது, 'கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பயணத்தின் போது கோடை வெப்பத்தை வெல்வது மிகவும் முக்கியம். குறிப்பாக வெப்பம், தலைவலி மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே, வெப்பமான காலநிலையை எதிர்த்து போராட தயாராக இருக்க வேண்டும். இதற்காக தளர்வான மற்றும் இலகுரக ஆடைகளை அணிய வேண்டும்.

தளர்வான, வெளிர் நிற ஆடைகள் மற்றும் பருத்தி மற்றும் கைத்தறி போன்ற துணிகளை அணிய வேண்டும். அவை சருமத்திற்கு இதமாகவும் காற்று பரவ ஏதுவாகவும் இருக்கும். மதிய நேரமாக இருந்தால் தலையில் தொப்பியும், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். கோடையில் நிறைய வியர்க்கும் என்பதால் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கலாம். குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்வதுடன், சோடாக்கள், ஆல்கஹால் மற்றும் காபின் போன்ற நீரிழப்பு பானங்களைத் தவிர்க்கவும்.

அதேபோல், இலகுவான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் முடிந்தவரை எண்ணெய் உணவுகளை தவிர்க்கலாம். காரணம் அவை உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கின்றன. தர்பூசணிகள், தக்காளிகள், ஆரஞ்சுகள், பிளம்ஸ் மற்றும் திராட்சைகள் போன்ற நிறைய தண்ணீரைக் கொண்டிருக்கும் புதிய கோடைகாலப் பழங்கள் போன்ற காய்கறிகள் மற்றும் சாலடுகள் உண்ணுவதின் மூலம் நுண்ணூட்டச்சத்துகளை பெற முடியும். பயணத்தின் போது காகிதம் அல்லது துணி விசிறியை உடன் எடுத்துச் செல்லலாம். சூடான மதிய வேளை பயணங்களை தவிர்க்கலாம்' என்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்