நெல்லையில் கொலையாளி பதுங்கலா?-போலீசார் தீவிர கண்காணிப்பு

பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி நெல்லை மாவட்டத்தில் பதுங்கி உள்ளாரா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2023-09-06 00:53 IST

பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி நெல்லை மாவட்டத்தில் பதுங்கி உள்ளாரா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை வாலிபர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு முக்கிய காரணமாக விளங்கிய நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் வெங்கடேஷ் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைய இருப்பதாகவும் தகவல் பரவியது. இதையொட்டி நெல்லை -தூத்துக்குடி ரோட்டில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள்.

இதுதவிர சேரன்மாதேவி, முக்கூடல் பகுதியில் வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு, வெங்கடேஷ் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்குமாறு கூறிஉள்ளனர். இதுதவிர போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

சூப்பிரண்டு உத்தரவு

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று முக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். வெங்கடேஷ் சொந்த ஊருக்கு வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் வெங்கடேஷ் குறித்த தகவல் தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது வெங்கடேஷ் தந்தை மீது கொலை வழக்கு இருப்பது தெரியவந்தது. அதாவது தி.மு.க. பிரமுகர் செல்லத்துரை கொலை சம்பவம் தொடர்பாக வெங்கடேசின் தந்தை அய்யப்பனை முக்கூடல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்