தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?: ரசிகர்கள் கருத்து

தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? என கரூர் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;

Update:2023-04-10 00:10 IST

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.

மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

திரையரங்குக்கு செல்வதில்லை

வெள்ளியணை காணியாளம்பட்டி அருகே உள்ள பாப்பணம்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி சுபத்ரா:-

இன்றைய நாட்களில் ஒரு சிறிய குடும்பத்திற்கு கூட மாதந்தோறும் அதிகப்படியான செலவுகள் உள்ளது. குழந்தைகளின் கல்விக்காகவே பெற்றோர் இருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதற்கான சூழ்நிலையும் இல்லை. ஒரு குடும்பத்தில் 4 பேர் சென்று டிக்கெட் எடுத்து படம் பார்த்து, இடைவேளை நேரத்தில் தின்பண்டங்கள் சாப்பிட்டு திருப்தியாக வர செலவு செய்யும் தொகையில், நான்கில் ஒரு பங்கு தொகையை ஓ.டி.டி. தளங்கள் வாயிலாக செலுத்தி வீட்டில் இருந்து கொண்டே நமக்கு விருப்பப்படும் நேரத்தில் திரைப்படங்களை குடும்பத்துடன் காண முடிகிறது.

சில பெரிய நடிகர்களின் படங்கள் கூட ஓ.டி.டி. தளங்கள் வாயிலாகவே வெளியீடு செய்யப்படுவது, திரையரங்குக்கு சென்று காத்திருந்து டிக்கெட் பெற்று திரைப்படம் பார்க்கும் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தி விடுகிறது. இதனால் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க கூடிய ஆர்வம் பொதுமக்களிடையே மிகவும் குறைந்து விட்டது. இதனால் பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் மாறிவிட்டதை காண முடிகிறது. ஆனால் என்னதான் வீட்டில் ஓ.டி.டி. தளங்கள் வாயிலாக திரைப்படங்களை பார்த்தாலும் திரையரங்கு சென்று படம் பார்க்கும் மகிழ்வை தருமா? என்றால் நிச்சயம் இல்லை.

டி.வி.யிலேயே புதிய படம் பார்க்கிறோம்

நொய்யல் அருகே உள்ள முத்தனூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சுதா:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக திரைப்படம் திரையரங்கில் வருகிறது என்றால் அப்பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் நேரமாக சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது ஒரு வித சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அதில் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்து சென்றதையும், அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கி பார்த்ததும் உண்டு. அப்போது ஏராளமான கும்பலுடன் குடும்பத்துடன் சேர்ந்து சினிமா கூட்டத்தில் படம் பார்ப்பது சந்தோஷமாக இருந்தது. தற்காலங்களில் புதிய படங்கள் திரைக்கு வரும் போது நமது செல்போனுக்கும் புதிய படம் வந்துவிடுகிறது. அதனால் நம் கைக்குள் இருக்கும் செல்போனிலேயே புதிய படத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் தற்போது உள்ள காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் வேலைக்கு செல்வதால் ஒரு சிலரை தவிர யாரும் திரையரங்கு செல்வதில்லை.

அதேபோல டி.வி. சேனல்களிலும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் புதிய படங்களை ஒளிபரப்பு செய்கின்றனர். ஆதலால் வீட்டில் உள்ளவர்கள் தியேட்டருக்கு செல்லாமல் வீட்டிலேயே திரைப்படங்களையும் பார்த்து விடுகின்றனர். இதனால் திரையரங்கு செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. அந்தந்த திரைப்படத்தின் கதாநாயகர்களின் ரசிகர்கள் மட்டுமே திரையரங்கு சென்று படம் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. தற்பொழுது திரையரங்கு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என்பது நடக்காத காரியம் ஆகிவிட்டது.

செலவுகள் அதிகம்

தோகைமலை அருகே நாகநோட்டக்காரன்பட்டியை சேர்ந்த சினிமா ரசிகர்் தினேஷ்:-

நான் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ காலங்களில் திரையரங்கு சென்று புதிய படங்களை பார்ப்பேன். இப்போது படம் வெளியான இரண்டு, மூன்று நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் அந்த படங்கள் வெளியாகிறது. தற்போது உள்ள காலக்கட்டத்தில் செலவுகள் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் படம் பார்ப்பது என்பது மிகவும் அரிது. ஏதாவது புதிய படம் வந்தால் அந்த ரசிகர்கள் தான் அதிகம் பேர் சென்று முதல் வாரங்களில் திரையரங்கில் படம் பார்க்கின்றனர். தற்போது திரையரங்கில் புதிய படம் கூட 20 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயமாக உள்ளது. மேலும், திரையரங்குகளில் குடும்பத்தினருடன் சேர்ந்து வந்து பார்க்கும் வகையில் நல்ல கருத்துள்ள படங்களையும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களையும் வாங்கி ஒளிப்பரப்பினால் அதிகம் பேர் வந்து பார்த்து செல்வார்கள்.

வீட்டில் படம் பார்ப்பதால் செலவு குறைகிறது

குளித்தலையை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் பிரியங்கா:-

கொரோனாவுக்கு முன்னர் ஓ.டி.டி. என்பதை பலரும் அறியாமல் இருந்தனர். அப்பொழுது திரையரங்குகளுக்கு சென்று பலரும் சினிமா பார்த்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் ஓ.டி.டியில் பலரும் வீட்டில் இருந்தபடியே சினிமாக்களை பார்த்து பழகி விட்டனர். திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதற்கான டிக்கெட், தின்பண்டங்கள் ஆகியவற்றுக்கு செலவு செய்வதை காட்டிலும் வீட்டில் இருந்தபடியே படங்களை பார்ப்பதால் செலவு குறைகிறது.

இதன் காரணமாக தற்போது பலரும் வீட்டில் இருந்தபடியே சினிமாக்களை பார்த்து வருகின்றனர். ஓ.டி.டியில் படம் பார்த்து பலரும் தற்போது பழகிவிட்டனர். இதனால் திரையரங்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஆனால் பொழுதுபோக்கு மற்றும் படத்தின் ஒலி, ஒளி ஆகியவற்றின் முழு வெளிப்பாட்டை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இளைஞர்கள் பெரும்பாலும் திரையரங்குகளுக்கு சென்றே படம் பார்த்து வருகின்றனர். இருப்பினும் குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் படம் பார்ப்பது என்கிற மோகம் தற்போது குறைந்தே வருகிறது.

புதிய படத்தின் முதல்காட்சி பார்த்தால் சந்தோஷம்

மண்மங்கலத்தை சேர்ந்த சினிமா ரசிகர் பாலு:-

சினிமா பார்ப்பது ஒரு பொழுது போக்கு தான். இதில் தனக்கு பிடித்த நடிகர்கள், நடித்த படத்தை பார்ப்பது என்றால் தனி ஆர்வம் தான். படம் வெளியே வந்த முதல் நாளே பார்த்தாக வேண்டும். அதுவும் திரையரங்கில் ரசிகர்கள் காட்சியில் முதல் காட்சியிலே பார்த்தால் தான் எனக்கு சந்தோஷம். இந்த சந்தோஷத்தை என் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வேன். இதனால் எனக்கு பிடித்த படம் வருகிறது என்றால் அதற்கான நாட்களை எண்ணிக் கொண்டே இருப்பேன். அதற்காக வீட்டில் செலவுக்கு தரும் பணத்தை சேமித்து வைப்பேன்.

சினிமா டிக்கெட் கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.130, ரூ.140 என்று இருப்பதை குறைத்தால் மிகவும் நல்லது. எனது நண்பர்கள் சிலர் திரையரங்கு சென்று படம் பார்க்க வருவதில்லை. வீட்டிலேயே ஓ.டி.டி. மூலம் ஆண்டிற்கு இவ்வளவு பணம் என செலுத்தி பார்ப்பார்கள். அதில் படத்திற்கு இடையே, இடையே அதிகம் விளம்பரம் வருவதால் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது. திரையரங்கு சென்று பார்த்தால் தான் படமும் புரிகிறது.

படம் நன்றாக இருந்தால் அதிகம் பேர் வருவார்கள்

கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பிரபல திரையரங்கத்தின் உரிமையாளர் பி.சுப்பிரமணியம்:-

இங்கு திரையரங்கம் ஆரம்பித்து 40 ஆண்டுகள் ஆகிறது. அப்போது ப்ரோஜெக்டர் மூலம் படம் திரையிடப்பட்டது. தற்போது சாட்டிலைட் மூலம் படம் திரையிடப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமே திரையரங்க தான். அதனால் ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள். புதுப்படங்கள் வந்தால் திரையரங்குகள் திருவிழாக்கள் போல் இருந்தது. தற்போது திரையரங்குகள் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் பயன்படுத்தப்படுகிறது.

இதனை அனுபவிப்பதற்காகவே ரசிகர்கள் படம் பார்க்க திரையரங்குகளுக்கு வருகிறார்கள். வீட்டில் படம் பார்ப்பதைவிட, திரையரங்குகளில் படம் பார்ப்பது என்பது புதுமையான அனுபவத்தை தருகிறது. வீட்டில் குடும்பத்துடன் மட்டும்தான் படம் பார்க்க முடியும். திரையரங்குகளில் நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் படம் பார்ப்பது என்பது புதுமையான அனுபவத்தை தருகிறது. கரூரை பொறுத்தவரை திரையரங்குகள் தான் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாகும். அதனால் குடும்பத்துடன் வந்து படம் பார்க்கிறார்கள்.

இந்த திரையரங்கு ஆரம்பிக்கும் போது 1,300 இருக்கைகள் இருந்தன. தற்போது காலத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கி 500 இருக்கைகள் கொண்ட திரையரங்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது லேட்டஸ்ட் சவுண்ட் சிஸ்டம், 4கே விசுவல், சவுகரியமான இருக்கை வசதிகள் உள்ளிட்டவைகள் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்க்க ஆர்வமாக வருகிறார்கள். படம் நன்றாக இருந்தால் பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள். இந்த காலக்கட்டத்தில் ஒரு படத்தின் ரிவ்யூக்கள், கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வந்துவிடுவதால் அதனை பார்த்துவிட்டு, அந்த படம் இதுபோன்றுதான் இருக்கிறது என்ற மனநிலையில் வந்துதான் படம் பார்க்கிறார்கள். முன்பு படம் பார்த்துவிட்டுதான் கருத்து சொல்வார்கள். தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துகளை பார்த்துவிட்டுதான் திரையரங்குக்கு வருகிறார்கள்.

நல்ல வரவேற்பு இருக்கிறது

தமிழ்நாடு நடப்பு வினியோகஸ்தர்கள் சங்க திருச்சி ஏரியா பொறுப்பாளர் காசி விஸ்வநாதன்:-

திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க நல்ல வரவேற்பு இருக்கிறது. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் கலெக்சன் கூடும். சுமாரான படங்களுக்கு வரவேற்பு இருக்காது. இப்போது ரசிகர்களே ஒரு படத்தின் இயக்குனர் யார்?. கதாநாயகன் யார்?. படத்தின் மைய கரு என்ன? என்பதை பகுப்பாய்வு செய்து கொண்டு தான் படத்துக்கே வருகிறார்கள். எங்களைவிட அவர்கள் கூடுதல் தகவல்களை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான லவ்டுடே என்ற படத்தில் பெரிய கதாநாயகர்கள் யாரும் நடிக்கவில்லை. ஆனால் படம் நன்றாக ஓடியது. செல்போனில் படம் பார்க்க முன்பு ஆர்வம் இருந்தது உண்மை தான். ஆனால் அது சில காலம் மட்டும் தான். இப்போது டி.வி.யில் படம் போட்டாலே பார்ப்பது கிடையாது. பொன்னியின் செல்வன், பாகுபலி போன்ற படங்களின் பிரமாண்டத்தை திரையரங்கிற்கு வந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும். நல்ல படமாக இருந்தால் அது பெரிய படம், சிறிய படம் என்று இல்லாமல் நன்றாக ஓடும். சென்னை முதல் கன்னியாக்குமரி வரை படங்களுக்கான ரிசல்ட் ஒரேமாதி தான் இருக்கும். அதை வைத்தே ஒரு படத்துக்கு மக்கள் எந்தஅளவுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்