கரூர் மாநகராட்சி பகுதியில் கழிவுநீரை அகற்றாமல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதா?

கரூர் மாநகராட்சி பகுதியில் கழிவுநீரை அகற்றாமல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதா? என அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

Update: 2022-08-11 18:45 GMT

வீடியோ வைரல்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கே.ஏ. நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்வாயில் இரண்டு பக்கவாட்டிலும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில், அடிப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கால்வாயில் வந்த கழிவுநீரை அகற்றாமல் அப்படியே கான்கிரீட் தளம் அமைப்பதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் கவிதா, நகராட்சி பொறியாளர் மாரிமுத்து, மண்டல குழு தலைவர் சக்திவேல், அன்பரசன் மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.ஏ.நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் தெருவின் மட்டத்திற்கு ஏற்ப சாக்கடை கால்வாய் பணியை அமைக்க முடியும் எனவும், ஒரு வீட்டிற்காக மட்டத்தை குறைத்து போட்டால் தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது குறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிலர் வீட்டின் மட்டத்திற்கு ஏற்ப சாக்கடையை பறித்து உள்ளனர். அதனை சரி செய்ய வரும்போது கழிவுநீரை திறந்து விட்டு உள்ளனர். தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்