ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படமா?

மூலைக்கரைப்பட்டி அருகே ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-25 20:40 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கடம்பன்குளம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த அரிசியானது சுண்ணாம்பு கட்டி போன்ற அடர் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருந்தது. சிலருக்கு புழுங்கல் அரிசியுடன் அடர் வெள்ளை நிற அரிசியும் கலந்து வினியோகம் செய்யப்பட்டது. எனவே ரேஷன் அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக சிலர் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் அதிகாரிகள் கடம்பன்குளத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அடர் வெள்ளை நிறத்திலான அரிசியானது செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், ஊட்டச்சத்து மிகுந்த இந்த அரிசியில் 3 வகையான வைட்டமின்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு உள்ளது என்றும், நாங்குநேரி நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வருகிற ஏப்ரல் மாதத்தில் வினியோகம் செய்வதற்காக வைத்திருந்ததை தவறுதலாக முன்கூட்டியே விற்பனைக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசிக்கு பதிலாக பொதுமக்களுக்கு மாற்று அரிசி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்