பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெண்மை புரட்சி
மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது.
அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.
விலை உயர்வு
இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.
இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
விலையின் தாக்கம்
ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
டீ குடிக்கும் ஆசை போச்சு
சிவகாசி மகேஸ்வரி:- வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆவின் பாலின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அதிகமான விலை உயர்வு. இதை தவிர்த்து இருக்கலாம். இந்த விலை உயர்வு எதிரொலியாக கடைகளில் விற்பனை செய்யப்படும் டீ, காபி, பால் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் டீ கடைக்கு சென்று டீ, காபி அருந்தும் நடுத்தர மக்கள் பாதித்துள்ளனர். பால் விலை உயர்ந்தால் அனைத்து விலையும் தானாக உயரும். எனவே பால் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசு முன்வர வேண்டும். பால் விலை உயர்வால் இனி டீ குடிக்கும் ஆசையே போய்விடும் போல் இருக்கிறது.
விருதுநகர் ஆவின் பால் நுகர்வோர் வெற்றிவேல் முருகன்:-
நான் அருப்புக்கோட்டை ரோட்டில் டீக்கடை வைத்துள்ளேன். எனது கடையின் பயன்பாட்டிற்கு ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் வாங்கி வருகிறேன் ஆவின் நிறுவனம் திடீரென ஆரஞ்சு பாக்கெட் பால் விலையை ரூ.12 உயர்த்தி விட்டது. நாங்களும் வேறு வழியின்றி டீயின் விலையை உயர்த்தி தான் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்ைவ பரிசீலனை செய்ய வேண்டும்.
கமிஷன் ரூ.1.50
ஆவின் முகவர் ஒருவர் கூறுகையில், பால் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நிறுவனம் எங்களுக்கு பாக்கெட்டுக்கு ரூ.1.50 மட்டுமே கமிஷனாக வழங்குகிறது. இதில் எங்களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளில் சேதமடைந்த பால் பாக்கெட்டுகளை திரும்ப பெறுவதில்லை. இதனால் அவற்றை நாங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை உயர்த்தி விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர் பால் உற்பத்தியாளர் நல சங்க செயலாளர் பாலமுருகன்:- ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ள நிலையில் ஆரஞ்சு பாக்கெட் விற்பனை விலையை ரூ.12 உயர்த்தி உள்ளது. தனியார் நிறுவன பால் பாக்கெட் விலை ரூ. 74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் இந்த செயல்பாடு பால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் கொள்முதல் விலை உயர்வை விட 75 சதவீதம் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடு வணிக நடைமுறைகளுக்கு முரணானது.
நடுத்தர மக்கள் பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆவின் பால் விற்பனையாளர் ராமகிருஷ்ணன்:- பால் விலை உயர்வால் விற்பனை குறையவில்லை. இருப்பினும் இந்த விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
வலையங்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரின்ஸ்:- பால் என்பது மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவை ஆகும். இதன் விலையை உயர்த்திக்கொண்டே இருந்தால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவர். பால் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.
ராஜபாளையம் அனுசுயா:-
ஆவின் பால் விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை கணக்கிட்டால் குடும்ப பட்ஜெட்டில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. அடிக்கடி உயர்ந்து வரும் பால் விலையேற்றம் என்னை போன்ற நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிறது. எனவே பாக்கெட் பால் விலை உயர்வை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.