குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளியான தகவல்

குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-04-30 09:15 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கமம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதால் துர்நாற்றம் வீசியதாக தகவல்கள் தீயாக பரவியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து குடிநீர் மாதிரியையும், தொட்டியில் இருந்த கழிவையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணத்தை மர்ம ஆசாமிகள் கலந்து இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பரிசோதனை முடிவில், குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அந்த குடிநீரில், இக்கோட்டி என்ற பாக்டீரியா இல்லாததால், எந்த மாட்டுச் சாணமும் கலக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆட்சியர், தொற்று எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு உகந்தது என்றும் ஆய்வு முடிவு வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருந்ததால், குப்பைகள் அடியில் இருந்ததை மாட்டுச் சாணம் என நினைத்ததாக கூறப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்