தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?
தடை விதித்தால் போதுமா? ‘பிளாஸ்டிக்' ஒழியுமா? என்று திண்டுக்கல் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.
காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.
எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பிரிக்க முடியாமல் செய்கிறது.
பிளாஸ்டிக்கின் வரவால் நாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு என்பதோ, குறுகிய நேரம் மட்டும்தான். அதன் பிறகு அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை யாரும் எண்ணி பார்ப்பது இல்லை.
இதை எல்லோரும் தெரிந்தே செய்கிறோம் என்று சுற்றுச்சூழல், உயிரின ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதிலும் அதிகம் படித்தவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் பொருட்களில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருப்பவை, 'யூஸ் அன்ட் துரோ' என்று சொல்லப்படுகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள்தான்.
இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடி, மிட்டாயின் பிளாஸ்டிக் உறை, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மகோல் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், தூக்குபைகள் ஆகியவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாத்தியமாகி இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு, பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது. இதில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உள்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை சமீபத்தில் தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பே தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மஞ்சப்பை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா என்பது பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
எலக்ட்ரீசியன் ராஜ்குமார் (கணவாய்பட்டி):- பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும் தாராளமாக கிடைக்கின்றன. டீக்கடைகளில் சூடான டீ மற்றும் காபி, ஓட்டல்களில் சூடான சாம்பார், குழம்பு வகைகள் பாலித்தீன் பைகளில் தான் கட்டி கொடுக்கின்றனர். பாலித்தீன் பைகளில் வைத்து சூடான பொருட்களை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது தெரிந்தும் கடைக்காரர்கள் கொடுக்கின்றனர், அதை மக்கள் தெரிந்தே வாங்குகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் அவ்வாறு வாங்கி சாப்பிடுவதால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து உள்ளது. பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மண்ணில் மக்காமல் அப்படியே கிடப்பதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, எரிப்பதால் காற்று மாசடைந்து நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே பாலித்தீன் பைகளின் உற்பத்தியை முற்றிலும் அரசு தடை செய்ய வேண்டும். பாலித்தீன் பைகள் கிடைக்காவிட்டால் தான் மக்கள் பழையபடி மஞ்சப்பையை பயன்படுத்துவார்கள்.
குடும்ப தலைவி கோமதி (ராஜக்காபட்டி):- கிராமங்களில் பாலித்தீன் பைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பாலித்தீன் பைகளை பயன்படுத்திவிட்டு சாலை ஓரத்தில் வீசுவதால் ஆடு, மாடுகள் அதை தின்னும் அளவுக்கு மோசமாகிவிட்டது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் அனைத்து விருந்து நிகழ்ச்சிகளிலும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்கள் அனைத்தும் பாலித்தீன் பைகளில் தான் பாக்கெட் செய்யப்படுகின்றன. அவை அனைத்தும் குப்பைகளாக திறந்தவெளியில் தான் வீசப்படுகின்றன. அனைத்து வகையான பாலித்தீன் பைகளையும் தடை செய்ய வேண்டும்.
உற்பத்தியை நிறுத்துங்கள்
குடும்ப தலைவி சுகன்யா (நத்தம்) :- பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடைப்பதால் தான் மக்கள் அதை வாங்குகின்றனர். அரசு தடை செய்த பின்னரும் தாராளமாக கிடைப்பது வேதனையானது. பாலித்தீன் பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது முழுமையாக நடப்பது இல்லை. மக்களும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்களை குப்பையில் தான் வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பாலித்தீன் பைகள் தடிமனாக இருந்தாலும், மெல்லியதாக இருந்தாலும் மக்கும் தன்மை இல்லாதது தான். எனவே அனைத்து வகையான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் காகிதம், பிளாஸ்டிக் டம்ளர்களின் தயாரிப்பை தடை செய்ய வேண்டும். உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே தடை முழுமை அடையும்.
ஆட்டோ டிரைவர் மோகன் (நல்லமநாயக்கன்பட்டி) :- பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இந்த சோதனை எல்லாம் சிறிய கடைகளில் நடக்கிறது. பெரிய கடைகள், வணிக நிறுவனங்களில் சோதனை செய்வது இல்லை. அரசு அதிகாரிகள் உறுதியான நடவடிக்கையில் இறங்கினால் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழிக்க முடியும். அதேபோல் உற்பத்தியை தடை செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆயிரம்தான் அரசு தடை விதித்தாலும் மக்களும் அதை மதித்து நடந்தால்தான் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.