பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்

பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-22 18:45 GMT

கூத்தாநல்லூர்:

பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடியில் இருந்து செல்கிறது பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால். வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை, பாசன வாய்க்கால் வழியாக கொண்டு சென்று நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும், லெட்சுமாங்குடி முகப்பில் பிரியும் இந்த வாய்க்காலில், வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீர், வாய்க்காலின் கடைசி பகுதி வரை முழுமையாக செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர் கலக்கிறது

சில இடங்களில் வாய்க்கால் மூடப்பட்ட நிலையில் மேடான பகுதியாக காணப்படுகிறது. மேலும், இந்த வாய்க்காலில் சில இடங்களில் ஆற்று தண்ணீருக்கு பதிலாக கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது.

மொத்தத்தில் கடந்த பல ஆண்டுகளாக பாசன வாய்க்கால் வழியாக ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் செல்லாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் மற்றும் பம்புசெட் மூலமாக கிடைக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டே ஒரு சில விவசாயிகள் மட்டும் சாகுபடி பணிகளை சிரமத்துடன் செய்து வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்