ஒத்தையடி பாதையாக மாறிய பாசன கிளை வாய்க்கால்

கொள்ளிடம் அருகே ஆக்கிரமிப்பு காரணமாக பாசன கிளை வாய்க்கால் ஒத்தையடி பாதையாக மாறி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-13 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஆக்கிரமிப்பு காரணமாக பாசன கிளை வாய்க்கால் ஒத்தையடி பாதையாக மாறி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன கிளை வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் கிராமத்தில் பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பழைய பாளையம் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்து நிழல் வாய்க்கால் என்ற பெயரில் பாசன கிளை வாய்க்கால் பிரிந்து சென்று சீயாளம் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை அளித்து வருகிறது.

மழைக்காலங்களில் நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி சூழும் அதிக நீரையும் வெளியேற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இது இருந்து வருகிறது. இந்த வாய்க்காலின் இரு கரைகளும் சுமார் எட்டு அடி வீதம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலம் கொண்டதாக அமைந்திருந்தன.

பொதுமக்கள் சிரமம்

இந்த வாய்க்காலின் கரை அப்பகுதியில் உள்ள கீழத்தெருவை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளிப்பகுதிக்கு வந்து செல்வதற்கும், அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு முக்கிய வழித்தடமாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த வாய்க்கால் கரையின் சாலை அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 3 அடி அகலமே உள்ள ஒத்தையடி பாதையாக மாறி உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் இந்த ஒத்தையடி பாதையை பயன்படுத்தி சென்று வரும்போது மிகுந்த இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை

இந்த நிலையில் இந்த நிழல் வாய்க்கால் பொக்லின் எந்திரத்தை கொண்டு தூர்வாரும் பணி நடந்தது. அப்போது நிழல் வாய்க்கால் பாசன சங்க கட்டமைப்பு தலைவர் சண்முகம் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் சென்று மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றிய பிறகுதான் தூர்வார வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து மேலும் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து நிழல் வாய்க்கால் பாசன சங்க கட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறுகையில், சீயாளம் கிராமத்தில் உள்ள பாசன கிளை வாய்க்கால் 10 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சிறப்பாக இருந்து பாசன வசதியை அளித்து வந்தது. இந்த வாய்க்காலின் இரு கரைகளும் வாகனம் சென்று வரும் அளவுக்கு அகலமாக இருந்தது.

ஒத்தையடி பாதையாக...

இந்த வாய்க்கால் கரை சாலை மூலமாக கொள்ளிடம் மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்கு மிகவும் வசதி வாய்ப்பாக இருந்து வந்தது. ஆனால் கடந்த வருடங்களில் படிப்படியாக வாய்க்காலின் கரை ஆக்கிரமிக்கப்பட்டு ஒத்தையடி பாதையாக மாறிவிட்டது. எனவே தற்போது ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே வாய்க்காலை தூர்வார வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் சார்பில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே நீர்வள ஆதாரத்துறை சார்பில் நிழல் வாய்க்காலின் இரு கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நீர்வளத்துறையின் மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கொள்ளிடம் உதவி பொறியாளர் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்