அனல் மின் நிலைய ஒப்பந்த பணி வழங்கியதில் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு தொழிற்சங்கம் வழக்கு

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் ஒப்பந்த பணி வழங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

Update: 2023-02-16 18:46 GMT

சென்னை,

சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிக்காக 660 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) கடந்த 2019-ம் ஆண்டு டெண்டர் கோரியது. இதில் பங்கேற்ற மத்திய அரசின் பெல் நிறுவனம் ரூ.4,957.11 கோடிக்கும், பி.ஜி.ஆர்., நிறுவனம் ரூ.4,442.75 கோடிக்கும் டெண்டர் கோரியது. இதில், பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் டெண்டர் மொத்த தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டும் என்ற டெண்டர் நிபந்தனைகளின்படி, அந்த தொகையை பி.ஜி.ஆர். நிறுவனம் செலுத்தாததால், டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்துசெய்து டான்ஜெட்கோ கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பி.ஜி.ஆர். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மீண்டும் டெண்டர் கோரக்கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

சி.பி.ஐ. விசாரணை

இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கே வழங்கி டான்ஜெட்கோ கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.

டெண்டர் நிபந்தனைகளின்படி 30 நாட்களில் வங்கி உத்தரவாதத்தை பி.ஜி.ஆர். செலுத்தவில்லை என்றால் டெண்டரில் பங்கேற்று அடுத்த இடத்தில் உள்ள பெல் நிறுவனத்துக்குதான் அந்த டெண்டரை டான்ஜெட்கோ வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இந்த டெண்டரை அதே பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கே வழங்கியது சட்டவிரோதமானது. ஏற்கனவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் 3 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் டான்ஜெட்கோவிற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டெண்டர் நிபந்தனைகளை மீறி பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு இந்த டெண்டர் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதால், இதுதொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அவசியம் இல்லை

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், "இந்த வழக்கைத் தொடர பெல் நிறுவன தொழிற்சங்கங்களுக்கு அடிப்படை உரிமை இல்லை. டெண்டர் ஒதுக்கீட்டில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை. அப்படியே முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டால் அதை விசாரிக்க தமிழ்நாடு போலீஸ் உள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு எந்த அவசியமும் இல்லை" என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 21-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்