வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்
கோவையில் வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயன்றனர். அவரின் நண்பர்களிடம் மோசடி ஆசாமி ரூ.10 ஆயிரம் பறித்துள்ளார்.
கோவையில் வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயன்றனர். அவரின் நண்பர்களிடம் மோசடி ஆசாமி ரூ.10 ஆயிரம் பறித்துள்ளார்.
வீடியோ காலில் ஆபாசம்
கோவையை சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் நீங்கள் செய்து வரும் தொழில் சம்பந்தமான பொருட்கள் தங்களிடம் உள்ளது. அதை குறைந்த தொகைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் பொருட்களை பார்த்துவிட்டு சொல்வதாக கூறி உள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர் வீட்டில் இருந்தபோது அவருடைய செல்போனுக்கு வீடியோ கால் வந்தது. அதை அவர் அட்டன் செய்த போது செல்போன் திரையில் இளம்பெண் ஒருவர் ஆபாசமாக நின்றார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபர் இணைப்பை துண்டித்து உள்ளார்.
ஆன்லைன் மோசடி
இதனால் சிறிது நேரம் கழித்து அந்த வாலிபரின் செல்போன் வாட்ஸ்-அப்க்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை திறந்து பார்த்த போது அந்த வாலிபர் அரை நிர்வாணமாக இருப்பதுபோன்று புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அரைநிர்வாண புகைப்படத்தை வேறு யாருக்கும் அனுப்பாமல் இருக்க எங்களுக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் தன்னை மிரட்டுவது ஆன்லைன் மோசடி கும்பல் என்பதை அறிந்த அந்த வாலிபர், அந்த ஆபாச படம் என்னுடையது இல்லை என்றும், பணத்தை தர முடியாது என்றும் கூறி உள்ளார்.
ரூ.10 ஆயிரம் மோசடி
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மோசடி நபர், ஆபாச புகைப்படத்தை வாலிபரின்உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். உடனே அந்த வாலிபர் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, முகநூல் பக்கத்தில் வாலிபருடன் தொடர்பில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களின் செல்போன் எண்களை எடுத்து அந்த வாலிபர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் படுத்து கிடப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
அதை பார்த்த உறவினர்கள், அந்த வாலிபரை தொடர்பு கொண்டு கேட்டனர். உடனே அந்த வாலிபர், மோசடி கும்பல் பணம் பறிக்கும்நோக்கில் புகைப்படங்கள் அனுப்பினால் நம்ப வேண்டாம். அந்த எண்ணையும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறி உள்ளார்.
இதற்கிடையே அந்த வாலிபரின் நண்பர்கள் 2 பேர் மோசடி நபரின், செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசி உள்ளனர். அவர்களை ஏமாற்றி மோசடி நபர், ரூ.10 ஆயிரத்தை பறித்து உள்ளார்.
பரபரப்பு
மேலும் அவர்களுக்கும் ஆபாச வீடியோ கால் சென்றதால் தங்களது நண்பரான வாலிபரை தொடர்புகொண்டு கேட்டு உள்ளனர். அப்போது அவர் மோசடி நபர் குறித்து கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபர், சைபர் கிரைம் போலீசை செல்போனில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.
அவர்கள் முகநூல் பக்கத்தில் ரிப்போர்ட் பிளாக் என்று இருப்பதில் சென்று புகார் அளிக்க அறிவுறுத்தினர். அதன்படி அந்த வாலிபர் செய்த உடன் மோசடி நபரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.