இந்து அறநிலையத்துறையில் உள்ள 5 காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு; 1,200 பேர் திரண்டனர்
இந்து அறநிலையத்துறையில் உள்ள 5 காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு; 1,200 பேர் திரண்டனர்;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையில் 3 அலுவலக உதவியாளர்கள், ஒரு ஓட்டுனர், ஒரு இரவு காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு நேற்று ஈரோடு திண்டலில் நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு பட்டப்படிப்பும், ஓட்டுனர் மற்றும் இரவு காவலர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
நேற்று நடந்த நேர்முகத்தேர்வில் 1,200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் ஆவர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பித்து இருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி தலைமையில் நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் உதவி ஆணையாளர்கள் அன்னக்கொடி, ரமணி காந்தன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.