தொழில் அதிபர் மகனிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொழில் அதிபர் ஆறுமுகசாமி மகனிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தினர்.;
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொழில் அதிபர் ஆறுமுகசாமி மகனிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது.
தொழில் அதிபர் மகனிடம் விசாரணை
அதன்படி இதுவரை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த சஜிவன், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் உள்பட ஏராளமானவர்களிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுதவிர சென்னையில் வைத்து சசிகலாவிடமும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் ஆறுமுகச்சாமியின் மகன் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி அவர் விசாரணைக்காக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை நடத்தும் இடத்திற்கு நேற்று மாலை 3 மணியளவில் வந்தார். அங்கு அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு வரை நீடித்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
விசாரணைக்கான காரணம் என்ன?
செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தியது ஏன்? என்பது குறித்து போலீசார் கூறியதாவது:-
கோவையில் செயல்பட்டு வரும் செந்தில் பேப்பர் அண்டு போர்டு நிறுவன இயக்குனராக செந்தில்குமார் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஆறுமுகசாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதுதவிர சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை கோடநாடு எஸ்டேட்டை தொடர்புபடுத்தி நடந்தாக தெரிகிறது.
ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆஜரான செந்தில்குமாரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.