ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த குட்டி யானைகளை பார்க்க ஆர்வம்
தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
கூடலூர்,
தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
ஆஸ்கார் விருது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குட்டி யானைகள் ரகு, பொம்மியை மையமாக வைத்து தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் குட்டி யானைகள் ரகு, பொம்மி, அதை பராமரித்து வந்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோர் பிரபலமாகி உள்ளனர்.
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானைகள், பாகன் தம்பதியை நேரில் பார்ப்பதற்காக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதேபோல் நீலகிரிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளும் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்து, ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு குட்டி யானையை கண்டு ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து ஆவணப்படத்தில் காண்பித்த இடங்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.
கவனத்தை ஈர்த்தது
இந்தநிலையில் குட்டி யானைகளை பராமரித்து வந்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்க்க சென்று விட்டனர். இதனால் அவர்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அவர்கள் எப்போது வருவார்கள் என வனத்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் விசாரித்தனர்.
சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது, ஆவணப்படத்தில் உள்ள படி ரகு குட்டி யானை சுட்டித்தனமாக உள்ளது. ஆனால், பாகன் தம்பதியை பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றனர். ஆவணப்படத்தில் இடம்பெற்ற குட்டி யானையை கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
வருகை அதிகரிப்பு
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் குடும்பத்தினருடன் முதுமலைக்கு வந்து குட்டி யானைகளை பார்வையிட்டு, செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் பிரபலமாகி வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.