அனைத்து வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி அனைத்து வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு ஏற்பட்டால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக பாதிக்கும்.

Update: 2022-10-01 19:57 GMT

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி

அனைத்து வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

ரிசர்வ் வங்கி நாட்டின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் அனைத்து கடன்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளது.

4-வது முறை

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து 4-வது முறையாக வங்கிகள் வழங்கும் கடன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வட்டி வீதமானது 1.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் இதுவாகும்.

நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து 6 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.

இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இதுவரை 1.4 சதவீதம் அதிகரித்த நிலையில் தற்போது 5 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச நிதிச் சூழல் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும் அதற்காகவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி நிதிக்குழுவின் ஒப்புதலுடன் வட்டி சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் வட்டி விகிதம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

விலை உயர்வு

இந்நிலையில் வங்கிகளின் வருவாய் இழப்பை ஈடுகட்ட வட்டி சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணம் வீக்கத்தை பொருத்தமட்டில் வரும் நிதியாண்டில் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டாலும் நடைமுறை சாத்தியமுள்ளதா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்த வட்டி விகித உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

வட்டி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவோம்

இது பற்றி விருதுநகரை சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.ஆர்.ராமதாஸ் கூறியதாவது:-

ரிசர்வ் வங்கி கடந்த 5 மாதங்களில் 4-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் வங்கிகளின் உதவியுடன் தொழில் செய்து வரும் எங்களை போன்றவர்கள் வட்டி விகித உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவோம். ஆனால் ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த நடைமுறை தொடரக்கூடாது என்பதே என் போன்றவர்களின் கருத்தாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தவணை காலம் அதிகரிக்கும்

விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் எஸ்.சரவணன் கூறியதாவது:-

என்னை போன்றவர்கள் வீடு கட்டுவதற்கு வங்கிகள் மூலமாக கடன் பெற்றுள்ளதோடு அவ்வப்போது பல்வேறு குடும்பச் செலவுகளுக்காக வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உண்டு. ஆனால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியை உயர்த்தி வருவதால் ஏற்கனவே பெற்ற கடனுக்கு தவணைத்தொகை கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது. இது என் போன்ற சாமானியரையும் தொழில்களையும் பாதிக்க கூடிய நிலையில் உள்ளதால் இதனை ரிசர்வ் வங்கி தொடர்ந்து செய்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

=========

Tags:    

மேலும் செய்திகள்