யூடியூப் வீடியோ பார்த்து நடனம் கற்றுக்கொள்ள ஆர்வம்:நகையை விற்று தென்கொரியா செல்ல முயன்ற நீலகிரி மாணவிகள் மீட்பு

யூடியூப் வீடியோ பார்த்து நடனம் கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டதால், பெற்றோருக்கு தெரியாமல் நகையை விற்று தென்கொரியா செல்ல முயன்ற நீலகிரி பள்ளி மாணவிகள் கோவையில் மீட்கப்பட்டனர்.;

Update:2023-02-13 00:15 IST

ஊட்டி

யூடியூப் வீடியோ பார்த்து நடனம் கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டதால், பெற்றோருக்கு தெரியாமல் நகையை விற்று தென்கொரியா செல்ல முயன்ற நீலகிரி பள்ளி மாணவிகள் கோவையில் மீட்கப்பட்டனர்.

நடனம் மீது ஆர்வம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியின் 14 வயது சிறுமி ஊட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நடனம் மீது அதீத ஆர்வம் இருந்து வந்துள்ளது.

இதேபோல் நடனம் மீது ஆர்வம் கொண்டுள்ள அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கூலித் தொழிலாளியின் 14 வயது மகளும், இவரும் தோழிகளாக மாறி விட்டனர். நடனம் மீது 2 பேருக்கும் அதிக ஆர்வம் இருந்ததால் நடன வகுப்புக்கு செல்ல முயற்சி செய்து வந்தனர். மேலும் யூடியூப்களில் அதிக அளவில் நடன நிகழ்ச்சிகளை பார்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையே பி.டி.எஸ். என்கிற தென் கொரிய ஆல்பம் நிகழ்ச்சி 73 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த மாணவிகள் தாங்களும் தென் கொரியா சென்று இதேபோல் நடனம் கற்றுக் கொண்டு மீண்டும் நீலகிரிக்கு திரும்பப் போவதாக கூறியுள்ளனர்.

கோவையில் மீட்பு

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஜெராக்ஸ் எடுக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பிய 2 மாணவிகளும் ஊட்டி பஸ் நிலையம் சென்று பஸ் மூலம், கோவை சென்று அங்கிருந்து சென்னைக்கு சென்று விட்டனர். மேலும் சினிமாவில் வருவது போல் போலீசார் தங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், செல்போன் வைத்திருந்த ஒரு மாணவி அதை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

மேலும் கையில் வெறும் ரூ.2000 மட்டும் இருந்ததால், தங்களிடம் இருந்த நகையை அடகு கடையில் வைத்து ரூ.20 ஆயிரம் கூடுதலாக வாங்கி உள்ளனர். சென்னை சென்ற பின்னர் பாஸ்போர்ட் இருந்தால் தான் வெளிநாடு செல்ல முடியும் என்பதையும், மேலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதையும் உணர்ந்தனர்.

இதனால் வீட்டுக்கு செல்ல முடிவு செய்த மாணவிகள் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் பாட்டி வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதனால் மீண்டும் கோவை வந்த மாணவிகள் பாட்டியிடம் பேசுவதற்காக செல்போனை ஸ்விட்ச் ஆன் செய்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் நேரில் சென்று அவர்களை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கோவைக்கு வரவழைத்தனர். இதன் பின்னர் மாணவிகளுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மாணவிகள் காணாமல் போனது குறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மனம்விட்டு பேசுவதில்லை

இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், பள்ளிகளில் இடைநீற்றல் இருக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் அந்த மாணவிகள் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதே சமயத்தில் படிப்பை மட்டுமே இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடங்கள் செயல்படுவதால் ஆசிரியர்கள் மாணவிகளிடம் மனம் விட்டு பேசுவதில்லை, அவர்களை தேர்வுக்காக மட்டுமே தயார் செய்வதால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே நீதிநெறி போதனை வகுப்பு ஆசிரியர்களையும் உளவியல் நிபுணர்களையும் கொண்டு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Tags:    

மேலும் செய்திகள்