நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக, கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-09-25 18:45 GMT

கிணத்துக்கடவு, 

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக, கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர வாகன சோதனை

பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள பழனியப்பா லே அவுட், எம்.ஜி.எம். நகர் பகுதிகளில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் 2 கார்கள், சரக்கு வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல் 2-வது லே அவுட்ல் இந்து முன்னணி பிரமுகரி 2 ஆட்டோக்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெட்ரோல் வீசிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பொள்ளாச்சியில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலையில் அரசம்பாளையம் பிரிவில் கிணத்துக்கடவு போலீசார் சார்பில், சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் 2 போலீசார் துப்பாக்கி ஏந்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், மாளேகவுண்டன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கோவை, பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து உள்ளதால், சம்பந்தப்பட்ட நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து, அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. மேலும் வாகன பதிவெண் குறிக்கப்பட்டு, வாகனங்களில் எங்கிருந்து வருகிறார்கள் என்பது உள்பட பல்வேறு விவரங்கள் விசாரித்த பின்னர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாகன சோதனை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்