கோடை விடுமுறை முடிந்து 7-ந்தேதி திறப்பு; பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரம்
கோடைவிடுமுறை முடிந்து 7-ந்தேதி திறக்கப்பட இருப்பதால் பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.;
கோடைவிடுமுறை முடிந்து 7-ந்தேதி திறக்கப்பட இருப்பதால் பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
பள்ளிகள் 7-ந்தேதி திறப்பு
தமிழகத்தில் கோடைவெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, கோடைவிடுமுறை முடிந்து வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேநேரம் ஒரு மாதத்துக்கு மேலாக பள்ளிகள் பூட்டி கிடப்பதால் வகுப்பறைகள் தூசி படர்ந்து, பள்ளி வளாகம் புதர்கள் மண்டி கிடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பள்ளிகளை தூய்மையாக வைக்கும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி துரிதப்பட்டது. அதன்படி பள்ளி வளாகத்தில் முட்புதர்களை அகற்றுதல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கழிப்பறைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான, கல்வி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கொசுமருந்து
இதற்கிடையே பூட்டி கிடக்கும் வகுப்பறைகளில் மலேரியா, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கலாம். அதன்மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ-மாணவிகளை கொசுக்கள் கடித்து தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி வகுப்பறைகளை திறந்து கொசுக்களை அழிக்கும் வகையில், கொசுமருந்து அடிக்கும் பணியும் நடக்கிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் கொசுமருந்து அடிப்பதற்கு ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியர் பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
மேலும் 6-ந்தேதிக்கு முன்பாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொசுமருந்து அடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் கொசுமருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.