புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் எதிரொலியாக புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-09-13 19:00 GMT

செங்கோட்டை:

கேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலியாக புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

'நிபா' வைரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 'நிபா' வைரஸ் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காய்ச்சல் பரிசோதனை

அதாவது நேற்று முதல் கேரளாவில் இருந்து புளியரை வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களை சோதனை சாவடியில் நிறுத்தி அதில் இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து அனுமதிக்கிறார்கள்.

பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

பஸ்சில் ஏறிய கலெக்டர்

இந்த பணிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதார அலுவலர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் கேரளாவில் இருந்து வந்த அம்மாநில அரசு பஸ்சில் கலெக்டர் ஏறி, பயணிகளிடம் 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

அப்போது, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர், இலத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்