கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பற்றி தீவிர விசாரணை

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பற்றி தீவிர விசாரணை

Update: 2022-10-25 18:45 GMT

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

10 பேரின் கைமாறிய கார்

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே 2 கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிவந்த கார் ஒன்று அதிகாலை 4 மணியளவில் வெடித்து சிதறியதில் அந்த காரை ஓட்டிவந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன் தொடர்ச்சியாக உக்கடம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உக்கடம் சரக துணை கமிஷனர் வீரபாண்டி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அந்த பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தடயவியல் வல்லுனர்கள், மோப்பநாய் பிரிவு ஆகிய அறிவியல் ரீதியாக அனைத்து புலனாய்வு பிரிவும் வரவழைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்

அந்த கார் யார் பெயரில் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்ததில் அது 10 பேர்களின் கைமாறி வந்தது தெரியவந்தது. அவர்களிடமும் விசாரணை நடத்தி கார் எங்கு இருந்து வந்ததும், இறந்தவரின் விபரத்தையும் 12 மணி நேரத்துக்குள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து கோர்ட்டு அனுமதியுடன் இறந்த ஜமேசா முபின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்பட 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உபா சட்டம் பாய்ந்தது

எனது (மாநகர போலீஸ் கமிஷனர்) மற்றும் துணை கமிஷனர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வீரபாண்டி தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் நேற்று (நேற்று முன்தினம்) இரவு கைதுசெய்யப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் சந்தேக மரணம் (சட்டப்பிரிவு-174) மற்றும் வெடி பொருட்கள் சட்டம் 3 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதில் தொடர்புடையவர்கள் கைதுசெய்த பின்னர் தற்போது அந்த வழக்கு மாற்றப்பட்டு, அவர்கள் மீது கூட்டு சதி (120 பி), 2 பிரிவினருக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் இருந்ததற்காக (153 ஏ), வெடி பொருட்கள் பயன்படுத்தி வெடிக்கப்பட்டதால் உபா சட்டம் (சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தீவிர விசாரணை

தொடர்ந்து சந்தேகப்படக்கூடியவர்களின் வீட்டை சோதனை செய்தும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் சோதனைச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அதிகாலை 3.30 மணியளவில் கோவிலுக்கு சென்று கண்காணிப்பு பணி செய்து சென்றனர். போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்று இருந்ததால் கார் அந்த இடத்தில் வெடித்து இருக்கலாம் என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், ஒருசிலர் கேரளா சிறைக்கு சென்று வந்தது தெரியவருகிறது. அவர்கள் எதற்காக கேரளா சிறைக்கு சென்று யாரை சந்தித்தார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

பாஷாவின் உறவினர்

கைதானவர்களிடம் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. கைதான இயாஸ், நவாஸ் மற்றும் சரோஸ் ஆகிய 3 பேர் முபினின் வீட்டில் இருந்து சிலிண்டர்கள் மற்றும் வெடி மருந்துகள் ஏற்றுவதற்கு உதவி செய்து இருக்கிறார்கள். ஒருவர் கார் கொடுத்து உள்ளார். ஒருவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு இருந்தார்.

கைதான தல்கா என்பவர் கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைதான பாட்ஷாவின் உறவினர் என்பது தெரியவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்