கொலை செய்யப்பட்ட என்ஜினீயரின் நண்பர்களிடம் தீவிர விசாரணை
கொலை செய்யப்பட்ட என்ஜினீயரின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
என்ஜினீயர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சீதாலெட்சுமிநகரை சேர்ந்தவர் குமாரசாமி. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் பாஸ்கர்(வயது 28). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் விராலிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6-ந் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற பாஸ்கர், இரவில் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய சகோதரர் அரவிந்த்(32), கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணமூர்த்திநகர் பகுதியில் ராணுவ மைதானம் அருகே வாலிபர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது, அது மாயமான பாஸ்கர் என்பது தெரியவந்தது. இது குறித்து கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கேமரா காட்சிகள் ஆய்வு
சம்பவத்தன்று மாலை பாஸ்கர், அவரது நண்பர் ரவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் ரவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டனர். பாஸ்கர் மட்டும் மன்னார்புரம் பகுதியில் இருந்துள்ளார்.
அதன்பிறகு அவர் எப்படி 1½ கி.மீட்டர் தூரத்தில் உள்ள ராணுவ மைதானம் பகுதிக்கு சென்றார்? என்பதை அறிந்துகொள்ள, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், பாஸ்கருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்று அவருடைய நண்பர்களிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.