குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்
திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள், முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள், முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
முப்போகம்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களுக்கு பாசத்திற்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை.
முன்னதாக மேட்டூர் அணை திறப்பு
இதன் காரணமாக கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் தற்போது ஒரு போக சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. மழை காலங்களில் தண்ணீர் மூழ்கியும், கோடை காலங்களில் தண்ணீர் இன்றியும் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக மே 24-ந்தேதி திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். .
குறுவை சாகுபடி
திருமருகல் ஒன்றிய பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பயறு பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்தது. இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருப்புகலூர், அண்ணாமண்டபம், அம்பல், போலகம், பொறக்குடி, திருமருகல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் 2 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்முனை மின்சாரம்
தற்போது விதை விதைப்பு, நடவு, களை எடுத்தல், மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி பணியை தொய்வு இன்றி மேற்கொள்ள மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் விதை நெல் வழங்க வேண்டும் என்றனர்.
--