அருப்புக்கோட்டையில் போட்டித்தேர்வர்களுக்கு அறிவுசார் மையம்

அருப்புக்கோட்டையில் போட்டித்தேர்வர்களுக்கான அறிவுசார் மையம் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Update: 2023-08-19 19:26 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டையில் போட்டித்தேர்வர்களுக்கான அறிவுசார் மையம் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

அரசு நூலகம்

அருப்புக்கோட்டை நாகலிங்காநகர் பகுதியில் அரசு நூலகம் செயல்பட்டு வருகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை இங்கு வந்து படித்து வந்தனர்.

இவ்வாறு வரும் மாணவர்களுக்கு நூலகத்தில் போதிய அளவு இட வசதி இல்லாததால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இடநெருக்கடியால் குறைவான அளவு மாணவர்கள் இங்கு வந்தனர். ஆதலால் இடவசதியுடன் அதிக அளவு நூல்களுடன் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

அறிவு சார் மையம்

இந்த பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்த அறிவு சார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ெரயில்வே உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் படிப்பதற்கு விசாலமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டித்தேர்வுக்கான நூல்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுவர்கள் விளையாட்டுடன் அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் சிறிய கல்வி பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் திறப்பு

இணையதளங்களை பயன்படுத்தி கற்றுக்கொள்வதற்காக கணினி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் படிப்பதற்கான பல்வேறு வகையான புத்தகங்கள், சிறுவர்கள் படிக்கும் சிறுவர் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்களும் இங்கு இடம் பெற உள்ளன.

பொது மக்களுக்கும், சிறுவர்களுக்கும் போட்டி தேர்வுகளுக்கு பயனுள்ள வகையில் உருவாகும் இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்