காரைக்குடியில், ரூ.1¾ கோடியில் அறிவுசார் மையம்
காரைக்குடியில், ரூ.1¾ கோடியில் அறிவுசார் மைய கட்டுமான பணிகளை நகரமன்ற தலைவர் முத்துத்துரை ஆய்வு செய்தார்.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சி சார்பில் கண்ணதாசன் மணி மண்டப வளாகத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணையாளர் லட்சுமணன், என்ஜினீயர், கோவிந்தராஜன் உதவி என்ஜினியர் சீமா ஆகியோர் உடன் சென்றனர். ஆய்வுக்குப்பின் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை கூறியதாவது;-
தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி இந்த கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது. ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் 4 ஆயிரத்து 500 சதுர அடியில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.இங்கு பகுதி மக்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டும், வாசிப்பை நேசிக்கச் செய்திடவும் குளிர்சாதன வசதியோடு கூடிய நவீன டிஜிட்டல் நூலகம், கருத்தரங்க கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் மத்திய அரசு ,தமிழக அரசு நடத்தும் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையமாகவும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இளைஞர்கள் நல மேம்பாட்டிற்காக கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்தின் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.