வடகிழக்கு பருவமழையை முன்னிட்டுவளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்அதிகாரிகளுக்கு, கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தர்மபுரி நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழை
தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதற்கான பணிகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி 26-வது வார்டு கொல்லஅள்ளி ரோடு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கல்வெட்டு அமைக்கும் பணி
தொடர்ந்து 10-வது வார்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், தர்மபுரி 4 ரோடு பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுத்தினார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.