மின்சார ரெயில்கள் இயக்க வசதியாக பாம்பன் புதிய பாலத்தில் மின்கம்பங்கள் பொருத்தும் பணி
வருங்காலத்தில் பாம்பன் புதிய பாலம் வழியாக மின்சார ரெயில்களை இயக்குவதற்கு வசதியாக மின்கம்பங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
ராமேசுவரம்
வருங்காலத்தில் பாம்பன் புதிய பாலம் வழியாக மின்சார ரெயில்களை இயக்குவதற்கு வசதியாக மின்கம்பங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
பாம்பன் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே தற்போதுள்ள ரெயில்வே பாலம் 105 ஆண்டுகளை கடந்து பழமையாகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது, கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.
இந்த புதிய ரெயில் பாலத்தை மின்வழிப் பாதையாக மாற்றி அமைக்கும் வகையில் மின்கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மண்டபத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து சுமார் 40 மின்கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளை ரெயில்வே தொழிலாளர்கள் மேற்கொள்ள வசதியாக பாலத்தில் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது..
333 தூண்கள்
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் கடலின் நடுவே ரூ.535 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் மீது 100 கர்டர்கள் பொருத்தப்படும். இதில் ஒவ்வொரு கர்டரும் சுமார் 20 மீட்டர் நீளமும், 28 டன் எடையும் கொண்டதாகும்.
மண்டபம் நுழைவுப்பகுதியில் இருந்து மையப்பகுதி வரை தூண்கள் மீது இரும்பு கர்டர் மற்றும் தண்டவாளம் பொருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. பாம்பன் பால நுழைவுப்பகுதியில் புதிய தூக்குப்பாலத்தை வடிவமைக்கும் பணியும் 2 மாதத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்த தூக்குப்பாலமானது வின்ச் மூலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி மையப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அதை பொருத்தும் பணியானது நடைபெறும்.
வருங்காலத்தில் ராமேசுவரம் வரை மின்வழிப்பாதை திட்டம் கொண்டுவரப்படும் என்பதால் பாம்பன் ரெயில் பாலத்திலும் மின்சார ரெயிலை இயக்க வசதியாக தற்போது புதிய ரெயில் பாலத்தில் மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் பாலத்தில் 100 மின்கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது வரையிலும் 40 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் கம்பமும் சுமார் 10 மீட்டர் உயரம் இருக்கும். இதுதவிர புதிய ரெயில் பாலத்தில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நடந்து சென்று வர வசதியாக நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.