சுகாதார குறைபாடுகளை வக்பு வாரிய தலைவர் திடீர் ஆய்வு
ஏர்வாடி தர்காவில் சுகாதார குறைபாடுகளை வக்பு வாரிய தலைவர் திடீரென ஆய்வு செய்தார்.
கீழக்கரை,
ஏர்வாடி தர்காவில் சுகாதார குறைபாடுகளை வக்பு வாரிய தலைவர் திடீரென ஆய்வு செய்தார்.
ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி தர்காவில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரகுமான் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் புகழ்பெற்ற ஏர்வாடி தர்காவிற்கு தமிழ்நாடு உள்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
வந்து செல்லக்கூடிய யாத்திரீகர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தர்கா கமிட்டி நிர்வாகிகளிடம் சந்தித்து பேசினார். அப்போது அவர், தர்காவிற்கு வரக்கூடிய யாத்திரீகர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதும் நமது கடமை என்றும் புதிய நிர்வாகிகளுக்கு சுகாதாரக் குறைபாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
துர்நாற்றம்
அப்போது ஏர்வாடி தர்காவை சுற்றி உள்ள இடங்களில் குப்பைகூளங்கள் நிறைந்து காணப்படுவதாவும், தர்காவிற்கு எதிரே உள்ள கழிவறை முகம்சுளிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாக சுட்டி காட்டினார். அதனை இடித்து புதிய நவீன கழிவறை கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், தர்காவிற்கு உள்ளே கூடுதல் பாதுகாப்பு காவலர்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தர்கா கமிட்டியாளர்களிடம் கூறினார்.
மேலும் ஏர்வாடி தர்காவில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் தனி நபர்கள் தலையீடு அதிகம் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும். அதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அரசு மனநல காப்பகத்தில் கூடுதல் படுக்கை அறைகள் உருவாக்கி வீதிகளில் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
சிறப்பு பிரார்த்தனை
முன்னதாக கீழக்கரை சாலை தெருவில் அமைந்துள்ள தர்காவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஏர்வாடி தர்காவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அப்போது தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், கீழக்கரை சதக் அறக்கட்டளை நிறுவன தலைவர் யூசுப் சாஹிப், சதக் அறக்கட்டளை நிறுவனர்கள் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, ஹாமிது இப்ராகிம், கீழக்கரை 18 வாலிபர்கள் ஷஹீது கல்வி அறக்கட்டளை ஜகாத் கமிட்டியின் தலைவர் ஜாகிர் ஹுசைன் மற்றும் ஏர்வாடி ஹக்தார் நிர்வாக கமிட்டியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.