நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி; 2 பேர் கைது

நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-06-09 20:22 GMT

நெல்லை:

நெல்லையில் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் குறுந்தகவல்

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜ நகரைச் சேர்ந்தவர் ஜோ (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். இவரது செல்போனுக்கு ஒரு லிங்க்குடன் கூடிய குறுந்தகவல் வந்தது. அதில், குறுந்தகவலில் உள்ள லிங்க் மூலம் செல்போனில் புதிய செயலி பதிவிறக்கம் செய்து, அந்த செயலி மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை உண்மை என்று நம்பிய ஜோ தனது செல்போனில் அந்த லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து, தனது முகவரியை குறிப்பிட்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தார்.

2 பேர் கைது

ஆனால் அடுத்த நாளே அந்த செயலி முடக்கப்பட்டதை அறிந்த ஜோ அதிர்ச்சி அடைந்து, நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ஜோவிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், ரிஷிநாத் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம், செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்