சாணார்பட்டி அருகே கதம்ப வண்டுகள் கடித்து 10 பேர் காயம்
சாணார்பட்டி அருகே கதம்ப வண்டுகள் கடித்து 10 பேர் காயமடைந்தனர்.
சாணார்பட்டி அருகே புகையிலைபட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் வரத்து வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இன்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கதம்ப வண்டுகள் திடீரென்று கலைந்து நாலாப்புறமாக பறந்தது.
மேலும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கதம்ப வண்டுகள் விரட்டி, விரட்டி கடித்தன. இதில், அவர்கள் காயமடைந்தனர். அவர்களில் புகையிலைபட்டியை சேர்ந்த செல்வி (வயது 58), மடூரை சேர்ந்த மரியசேசு (52) ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.