பூந்தமல்லியில் சாலையோரம் கிடந்த பையில் பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு

பூந்தமல்லியில் சாலையோரம் கிடந்த பையில் பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு வீசி சென்றது யார்? போலீஸ் விசாரணை.

Update: 2023-08-24 18:51 GMT

பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் சோபனா (வயது 39). இவர், பூந்தமல்லி நியூ மாங்காடு சாலை, மலையம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சோபனா நேற்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு வந்தார். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நிறுவனத்துக்குள் செல்ல முயன்றார்.

அப்போது அங்கு சாலையோரம் ஒரு கட்டைப்பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். சோபனா, அந்த பையை திறந்து பார்த்தார். அதில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ அந்த குழந்தையை கட்டைப்பையில் போட்டு அங்கு வீசி சென்றது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், அந்த பெண் குழந்தையை மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு பால் கொடுத்து பசியை போக்கினர். பின்னர் குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பச்சிளம் பெண் குழந்தையை அங்கு வீசி சென்றது யார்? முறை தவறி பிறந்த குழந்தை என்பதால் இவ்வாறு செய்தார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வளர்க்க மனம் இன்றி இதுபோல் வீசினார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்