பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான புத்தொழில் நிதித் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-01-28 00:12 GMT

சென்னை,

புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக ''தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்'' என்ற புதிய திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோர்களால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்திற்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே மாதத்தில் இருந்து தொழில்முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் இருந்து, தொழில்முனைவு வழிகாட்டுநர்கள், அரசு அலுவலர்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய தகுதியான நடுவர் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியான 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.7.50 கோடி பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். இப்புத்தொழில் நிறுவனங்களில் அரசே முதலீடு செய்வதன் வாயிலாக இந்நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் பெருகும்.

பயனடைந்த நிறுவனங்கள்

தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை இடம் மாற்றுவதற்கு ஏற்றவாறு அனைத்து பொருட்களையும் சிப்பமாக கட்டும் சேவையை வழங்கி வரும் 'பேக் என் பேக்' நிறுவனத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்பட்ட சேவையை வழங்க ரூ.2 கோடி பங்கு முதலீடு நிதி வழங்கப்பட்டுள்ளது.

கழிவுகள் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க உதவும் வகையில் கழிவு மேலாண்மைக்கான ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ள யூனிபோஸ் நிறுவனத்திற்கு சந்தைக்கு தேவையான வகையில் ரோபோடிக்ஸ் எந்திரத்தை தயாரித்து விற்பனையில் ஈடுபடுவதற்காக ரூ.2.50 கோடி பங்கு முதலீடு வழங்கப்பட்டுள்ளது.

சாலைகளில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்ட வாகனங்களை விரைவாக பழுது நீக்கவும், அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களை உரிய இடத்தில் சேர்க்கவும் உதவும் தொழில்நுட்ப சேவையை நாடெங்கும் வழங்கும் திட்டத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் 'டோவ் மேன்' நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வாகன தொழில் துறையின் பரிவர்த்தனைகளை இலகுவாக்க உதவும் மென்பொருள் செயலியை வடிவமைத்து பல பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள எக்கோ சாப்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடிய உணவு தானியங்களை பதப்படுத்தும் எந்திரக் கருவியை வடிவமைத்து வரும் பீஸ் ஆட்டோமோசன் நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்