ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆங்காங்கே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று காலை பொக்லைன் எந்திரம் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற முயன்றனர்.
சிலையின் அடிபாகத்தை இடித்து கொண்டு இருந்தனர். இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல அந்த பகுதியில் பரவியது.
தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் பகுதி நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்து சிலையை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள் ஏன் சிலையின் பீடத்தை உடைத்தீர்கள் என கண்டித்தார். பின்னர் சிலையை அகற்றும் பணியை நிறுத்துமாறு கூறினார்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த இந்திராகாந்தி சிலையை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த 25 ஆண்டு காலமாக இருந்து வரும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். சிலை அகற்றுவது தொடர்பாக கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., கே.பழனி, மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், ஒன்றிய செயலாளர் முனுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் ஜெயகாந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலை வேறு இடத்தில் அமைப்பதற்கு முறையான கால அவகாசம் அதிகாரிகள் வழங்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நீண்ட நேர வாக்குவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு சிலை அமைக்க மாற்று இடம் வழங்குவதாக தாசில்தார் ஜெயகாந்தன் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர். சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.