இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது-மத்திய மந்திரி வி.கே.சிங் தகவல்

உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது என வாணியம்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

Update: 2023-04-25 18:32 GMT

வாணியம்பாடி

உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது என வாணியம்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

அதிகாரமளிக்கும் திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில், மாணவர் அதிகாரமளிக்கும் திட்ட விளக்க நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு அழைப்பாளராக மத்திய சிவில் விமான போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு மாணவர் மேம்பாட்டு திறன் வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியா உலக அளவில் 2 அல்லது 3-வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் புதுப்புது கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுவதால் உலக நாடுகள் இந்தியாவை கூர்ந்து கவனித்து வருகின்றன.

உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளது. மற்ற நாடுகளின் வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவின் பாஸ்போர்ட் மதிக்கப்படுகிறது.

ராக்கெட்

உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் இந்தியர்கள் ஆளுமை வர்க்கத்தில் உள்ளனர். உதாரணத்திற்கு நாசாவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானிகள் வெளியேறிவிட்டால் நாசாவால் ஒரு ராக்கெட்டை கூட விண்ணில் அனுப்ப இயலாது. இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது ராணுவம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் ஜாதி, மத பேதம் இன்றி பணி செய்து வெற்றியை அடைகின்றனர்.

ஆகையால் மாணவர்களாகிய உங்களுக்கு அருமையான வாய்ப்புகள் உள்ளது. படித்தல், எழுதுதல், கேட்டல் என்ற நிலைகளோடு இருந்து விடாமல் உற்று நோக்கி செயல்படுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்.உங்களுடைய முன்னேற்றத்திற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், நீங்கள் சாதனையாளராக உருவாகி, புதிய இந்தியாவை உருவாக்குவதில் பங்களிப்பாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன், பல்வேறு துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்