ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு அறுவை சிகிச்சை

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தந்தையின் சவ்வை எடுத்து டாக்டர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.;

Update:2022-06-20 09:55 IST

கால்பந்து வீராங்கனை

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 49). நெசவு தொழிலாளி. இவரது மகள் மாரியம்மாள் (19). இவர் இந்திய மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்த ஆண்டு ஈரானில் நடந்த ஆசிய கால்பந்து லீக் போட்டியிலும், கடந்த 2021-ம் ஆண்டு பிரேசில் மற்றும் சுவீடன் நாட்டில் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்று 12 கோல்கள் அடித்துள்ளார்.

மாரியம்மாள் கடந்த 8 வருடங்களாக கால்பந்து விளையாடி வருகிறார். தனது இளம் வயதில், சகோதரனை பார்த்து கால்பந்து ஆட கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த 'கேலோ-இந்தியா' போட்டிக்காக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாரியம்மாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.




ஆஸ்பத்திரியில் அனுமதி

பயிற்சியை மேற்கொள்ளும் போது அவரது இடது முட்டியின் சவ்வு கிழிந்ததில் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலாளர் அபூர்வா பரிந்துரைப்படி, அவர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மூட்டு உள்நோக்கி கருவி துறை, விளையாட்டு காயத்துறையின் தலைவர் டாக்டர் லெனார்டு பொன்ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உதவியுடன், கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் லெனார்டு பொன்ராஜ் தெரிவித்ததாவது:-

அறுவை சிகிச்சை

டாக்டர்கள் காயத்தை ஆராய்ந்ததில் மாரியம்மாவிடம் இருந்தே சவ்வு எடுத்து மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொள்ள முடியாத நிலை இருப்பது தெரியவந்தது. அவ்வாறு செய்தால் அவரால் மீண்டும் விளையாட முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் இறந்தவர்களிடம் இருந்து பதப்படுத்தப்பட்ட சவ்வையும் எடுத்து மாரியம்மாளுக்கு பயன்படுத்தவும் இயலாது. விளையாட்டு வீராங்கனை என்பதால் இந்த முறையில் சவ்வு 2-3 மாதத்தில் கிழிந்து விடவும் வாய்ப்புள்ளது.

எனவே 'அலைவ் அல்லோ கிராப்ட்' என்கிற அறுவை சிகிச்சையில், உயிருள்ள ஒருவரிடம் இருந்து சவ்வை எடுத்து பொருத்தி சிகிச்சை மேற்கொள்வது ஆகும். அந்தவகையில் மாரியம்மாளின் தந்தை பாலமுருகனின் வலது கால் முட்டியில் உள்ள எலும்புடன் சேர்த்து சவ்வு எடுக்கப்பட்டு, மூட்டு உள்நோக்கி கருவி சிகிச்சை முறை வழியாக மாரியம்மாளின் இடது முட்டியில் பொருத்தப்பட்டது.

சாதனை

உயிருள்ள ஒருவரிடம் இருந்து சவ்வு எடுத்து மற்றொருவருக்கு பொருத்துவது இந்தியாவில் முதன் முறையாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இதே சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்திருந்தால் ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவாகும். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்