இந்தியா மதச்சார்பற்ற நாடுதான்: கவர்னருக்கு செல்வப்பெருந்தகை பதில்

மதவெறுப்பை வளர்க்கிற வகையில் கவர்னர் பேசியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-23 13:53 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் நடைபெற்ற வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி அரசமைப்புச் சட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அவர் பேசும்போது, மதச்சார்பின்மை என்ற வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம் பெறவே இல்லை. 25 ஆண்டுகளுக்கு பிறகு, மதச்சார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது என்று கூறி, அதுகுறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

எந்த அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ, அதை அவமதிக்கிற வகையில் கவர்னர் பேசியிருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சமய சார்பின்மையின் என்பதன் பொருளானது, அரசு எந்த மதத்தையும் தனக்கென ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாகும். நாட்டிலுள்ள அனைத்து மதங்களையும் அரசமைப்புச் சட்டம் சமமாக பாவிக்கிறது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சமயத்தை ஏற்றுக் கொள்ள, அதை பரப்ப உரிமை கொண்டுள்ளார்கள்.

இந்தியா ஒரு சமய சார்பற்ற குடியரசு என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு சமயம் என்றோ, அரசு ஆதரவு பெற்ற சமயம் என்றோ இந்தியாவில் எதுவும் இல்லை. இதற்கு கேடு விளைவிக்கிற வகையில் ஒரு மாநிலத்தின் ஆளுநரே மதச்சார்பற்ற கொள்கையை விமர்சனம் செய்து மதவெறுப்பை வளர்க்கிற வகையில் பேசியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். அரசமைப்புச் சட்டப்படி பொறுப்பு வகிக்கிற ஒரு கவர்னர் இப்படி பேசுவதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. கடவுள் ஒருவரே, அவரை பல்வேறு வடிவத்தில் பல்வேறு விதமாக வழிபடுகிறோம் என்பது நம் கொள்கை என்று கூறுகிற ஆர்.என். ரவி இத்தகைய மதவெறி நடவடிக்கைகளை அவருடைய சனாதன தர்மம் அனுமதிக்கிறதா ? ஏற்றுக் கொள்கிறதா ? என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

எனவே, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக செயல்படுகிற கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சு, அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிற செயலாகும். இத்தகைய பேச்சுகளை அவர் தொடர்ந்து பேசுவாரேயானால் அவருக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புகளை தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அணி திரண்டு வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்