23-ந் தேதி முதல் கால வரையற்ற போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 23-ந் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
ராஜபாளையம்,
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 23-ந் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
மருத்துவ துணி உற்பத்தி
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த தொழிலில் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 3 ஆண்டுகளுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
வேலை நிறுத்தம்
இந்தநிலையில் தமிழக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மேலும் தொழிலுக்கு தேவையான உதிரி பாகங்களின் விலையும், தறி பராமரிப்பு செலவும் இரு மடங்கு உயர்ந்து விட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எனவே விலை உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி வழங்க கோரி, கடந்த மாதம் மருத்துவ துணி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைக்கு உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கூலி உயர்வு கோரிக்கைக்கு முறையான பதிலளிக்காத உற்பத்தியாளர்களை கண்டித்தும், செலவுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க கோரியும் சிறு, குறு உற்பத்தியாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இதனை தொடர்ந்து சங்கரபாண்டியபுரத்தில் உரிமையாளர்கள் மகாசபை கூட்டம் சங்கத்தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விரைவில் தங்களது கூலி உயர்வு கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், வரும் 23-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.