"பண்டிகை காலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருப்பது வேதனை தருகிறது" - அமைச்சர் மெய்யநாதன்
‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் மூலம் ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வந்திருக்கிறது என அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டார்.
சென்னை,
பண்டிகை காலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருப்பது வேதனையை தருவதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதற்கும் மேலாக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டத்தின் மூலம் ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வந்திருக்கிறது.
இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு சற்று அதிகரித்துள்ளது என்ற தகவல் மனதுக்கு வேதனையை அளிக்கிறது. எதிர்காலத்தில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அனைவரும் நடவடிக்ககளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.