ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.;

Update:2022-09-03 21:39 IST

பென்னாகரம்:

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா, கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

போலீசார் அறிவுறுத்தல்

மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பரிசல் இயக்கவும், குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்