கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கோடைகாலம் நெருங்குவதையொட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2023-03-05 18:45 GMT

சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்தநிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான காலநிலை நிலவும் மலைப்பாங்கான சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோடைகாலம் நெருங்கி வருவதையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இந்தநிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். குறிப்பாக வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அதைத்தொடர்ந்து சுற்றுலா வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றன.

படகு சவாரி

பின்னர் சுற்றுலா பயணிகள் பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், தேவதை அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளையும் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பொழுதுபோக்கினர். மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

திடீர் மழை

இதற்கிடையே கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக மிதமான வெப்பம் நிலவியது. நேற்று மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் இந்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதயத்தை வருடிய இதமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்