சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என்பது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-04 21:00 GMT

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பார்பட்டி சுங்கச்சாவடி

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தேனியில், கம்பம் சாலையில் உப்பார்பட்டியிலும், மதுரை சாலையில் குன்னூரிலும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உப்பார்பட்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குன்னூரில் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையே சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

லாரி தொழில் பாதிப்பு

பெரியகுளம் லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தங்கமணி:- சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் லாரி தொழில் பயங்கர வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காய்கறி சரக்கு ஏற்றி வந்தால் வாடகையை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளது. சுங்கச்சாவடி கட்டணத்தை விவசாயிகளிடம் இருந்து தான் வசூல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகளும், மக்களும் தான். கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்லும் அதே நேரத்தில் சுங்கச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இருப்பது இல்லை. நீண்டதூரம் பயணம் சரக்கு ஏற்றிச் செல்லும் டிரைவர்கள், சுங்கச்சாவடி அருகில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். அவ்வாறு லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்கும் போது டீசல் திருட்டு, செல்போன் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது இல்லை. கட்டணம் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையை, கொஞ்சமாவது அடிப்படை வசதிகளில் காட்ட வேண்டும்.

சுங்கச்சாவடியில் இவ்வளவு கட்டணம் தேவையே இல்லை. தேனியில் இருந்து ஐதராபாத் சென்று வருவதற்கு சுங்கச்சாவடிக்கு மட்டும் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரம் வரை செலவாகிறது. தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிச் சென்றால் ரூ.800 சுங்கச்சாவடி கட்டணம் வருகிறது. இதனால், பெரிய, பெரிய ஆட்கள் எல்லாம் லாரி தொழிலைவிட்டு வெளியேறி வருகின்றனர். கட்டண உயர்வால் லாரி தொழில் செய்ய முடியாமல் லாரிகளை பலரும் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தோம். ஆனாலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

சுற்றுலா வாகனங்கள்

தேனி மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன்:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுற்றுலா வாகனங்களின் வாடகை உயர்த்தப்பட்டது. சாலைப் பயணங்களில் எரிபொருள் செலவை விடவும் சில இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் அதிகம் இருப்பதாக தெரிகிறது. எத்தனை முறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தினாலும், அதன் பாதிப்பு வாடிக்கையாளர்களுக்கு தான். சுற்றுலா அழைத்துச் செல்லும் போது சுங்கக்கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தான் செலுத்துகிறார்கள். கொரோனா பரவலுக்கு முன்பு தேனியில் இருந்து கம்பத்துக்கு சுற்றுலா வாகன வாடகை ரூ.800 வசூலித்தோம். பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததால் வாடகையில் ரூ.400 ஏற்றினோம். இப்போது சுங்கக் கட்டணம் ரூ.100 சேர்த்து ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் மக்களுக்கு சுற்றுலா செல்லும் மனநிலையே மாறி விடும். அதன் மூலம் சுற்றுலா தொழில் பாதிப்பு அடையும். சுங்கக்கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.

கட்டுமானத்துக்கு பின்னடைவு

அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் ஜெகநாதன்:- சுங்கவரி விதிப்பு என்பதே கட்டுமானத்துறைக்கு பின்னடைவு தான். சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதால் கட்டுமான தொழில் அதிக பாதிப்பை சந்திக்கிறது. ஏற்கனவே தனியார் கட்டுமானங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 12 முதல் 18 சதவீதம் அமல்படுத்தியதால் கட்டுமான செலவு அதிகரித்தது. தற்போது சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதால் சாமானிய மக்களின் வீடு கட்டும் செலவு, வணிக கட்டுமானங்களின் செலவு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. சிமெண்டு, ஜல்லி, மணல், கம்பிகள் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயரும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆலோசித்து இதுபோன்ற வரி உயர்வுகளை தவிர்க்க வேண்டும்.

விலைவாசி உயரும்

சின்னமனூரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் முத்துமணி:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் ஏற்கனவே விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. தேனியில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்தாலும், அவற்றை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் போது, போக்குவரத்து செலவுகளை சுங்கச்சாவடி கட்டணமும் சேர்த்து அதிகரிக்கிறது. சுங்கச்சாவடி கட்டணத்தை மேலும் உயர்த்தியதால் அந்த தொகையும் காய்கறிகளின் மீது தான் ஏற்றப்படும். இதனால், சென்னை மக்கள் அதிக விலை கொடுத்து தான் காய்கறிகள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு அதிக விலைக்கு வாங்கும் மக்கள், அந்த விலை விவசாயிகளுக்கு சென்றடைவது இல்லை என்பதை உணர வேண்டும். ஏனெனில், உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத சூழல் தான் இருக்கிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வால் காய்கறி மட்டுமின்றி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரும். இவ்வளவு வசூல் செய்த போதிலும் சாலைகளை முறையாக பராமரிப்பது இல்லை.

தேனியை சேர்ந்த கோபிநாத்:- குடும்பத்தோடு வெளியூர் செல்வதாக இருந்தால் இப்போதெல்லாம் காருக்கு நிரப்பும் பெட்ரோல், டீசல் செலவுக்கு இணையாக சுங்கச்சாவடிகளுக்கு செலுத்தும் கட்டணம் இருக்கிறது. வாகனம் வாங்கும் போதே சாலை வரி செலுத்துகிறோம். அதன்பிறகும் சாலையில் பயணம் செய்ய சுங்கச்சாவடி கட்டணம் என்றால் அது சரியானது தானா என்று தெரியவில்லை. தேனியில் இருந்து மதுரையை தவிர வேறு எந்த நகரங்களுக்கும் ரெயில் சேவை கிடையாது. இதனால் கார்களில் செல்வது தான் எளிதாக இருந்தது. இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு போன்றவற்றால் வெளியூர்களுக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை நாடிச் செல்லும் சூழல் தான் உருவாகும். வாடகை வாகனங்கள் ஓட்டும் தொழிலும் பாதிக்கப்படும். மற்றொருபுறம் இந்த கட்டணம் உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்