ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது - மக்கள் நீதி மய்யம்

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது, ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-04 14:29 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019ம் ஆண்டுக்குப் பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

தற்போது பால் உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான உ கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன் வந்திருப்பதோடு, நிலைப்படுத்தப்பட்ட, சமன்படுத்தப்பட்ட பால் விற்பனை விலையை உயர்த்துவதில்லை என்கிற தமிழக அரசின் முடிவிற்கு பாராட்டுகள்.

அதே சமயம் பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு 15ரூபாய் கொள்முதல் விலை உயர்வு கேட்ட நிலையில் யானை பசிக்கு சோளப்பொரியை உணவாக வழங்குவது போல் 3ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்க தமிழக அரசு முன் வந்திருப்பதும், பால் முகவர்களுக்கான ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

மேலும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்கி விட்டு நிறைகொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலையை லிட்டருக்கு 12ரூபாய் உயர்த்துவதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிப்பதோடு, மாதாந்திர அட்டைக்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலை உயர்வுக்கும் லிட்டருக்கு 14ரூபாய் வித்தியாசம் இருப்பதால் இது ஊழல், முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் கட்டுபடியாகாது என்பதால் அதனையும் மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 10.00ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முன் வர வேண்டும்.

மேலும் ஆவினின் வளர்ச்சி என்பது பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள், பொதுமக்களோடு தொடர்புடையது என்பதால் இனி வருங்காலங்களில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு, பால் விற்பனைக்கான கமிஷன் தொகை இம்மூன்றையும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு போல் ஆண்டுதோறும் மாற்றியமைக்க அரசு ஆவண செய்திட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்